என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக வேலை திட்டம்"

    • ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும்.
    • மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை வெறும் 9 நாள்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது.

    இந்தத் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்க்கவும், கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது.

    கிராமப்புற பொருளாதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாள்கள் வரை வேலை வழங்க முடியும்.

    ஆனால்,இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 9.27 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை கோரி தமிழ்நாட்டில் 85.70 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன.

    அவர்களில் 74.95 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன. எனினும், அவர்களில் 30.30 லட்சம் குடும்பங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 20.61 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாள்கள் வேலை வழங்கப்படும் மாறாக, மத்திய அரசு ஒதுக்கியுள்ள மனித நாள்களுக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்கள் குறைக்கும்படி ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு திமுக அரசு ஆணையிட்டுள்ளது.

    அதனால் தான் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 35 நாள்கள் வேலை வழங்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 9 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும்.

    அதையாவது திமுக அரசு வழங்குமா? அல்லது 12 கோடி நாள்களைத் தாண்டக் கூடாது என்ற எண்ணத்தில் இனிவரும் நாள்களில் வேலைவாய்ப்பைக் குறைத்து விடுமா? என்பது தெரியவில்லை.

    வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு கடந்த 2023-24ஆம் ஆண்டில் ரூ.12,136 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.7587 கோடியும் தமிழகத்திற்கு ஒதுக்கியது. ஆனால், நடப்பாண்டில் கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக ரூ.5053 கோடியை மட்டும் தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டிற்கும் முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கும் குறைவு ஆகும்.

    ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல. மனிதத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் ஆகும். கடந்த காலங்களில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட கூடுதல் தொகைக்கு வேலை வழங்கி விட்டு, அதை மத்திய அரசிடமிருந்து பெற்ற வரலாறு உள்ளது. அதே நிலையை இப்போது எடுக்காவிட்டால், மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற வேண்டிய தொகையில் ரூ.10,000 கோடி வரை இழக்க வேண்டியிருக்கும். மாநில அரசின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் திமுக இந்த சிக்கலில் அமைதி காப்பது ஏன்?

    நடப்பாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 74.75 லட்சம் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித வேலை நாள்களை பெறவும், அதற்காக ஆகும் ரூ.18,106 கோடி செலவில் மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை- கேரளமாநில எம்.பி.
    • 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால் வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்- கனிமொழி எம்.பி.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற எழை மக்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மக்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால், ஊதியத்தை விடுவிக்காமல் பல மாதங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

    இன்று கேரள மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அவர் பேசும்போது "இத்திட்டம் தேவையை அடிப்படையாக கொண்டது. 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. ஆதூர் பிரகாஷ் பேசுகையில் "ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 811 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற நிலைக்குழு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசாங்கம் தாமதமின்றி விடுவிக்குமா?" என்றார்.

    இதற்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அஅச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பதில் அளித்து கூறியதாவது:-

    கடந்த வருடம் கேரளா இத்திட்டத்தில் 3500 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பணத்தை விடுவிப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலுவையில் இருக்கும் நிதி இன்னும் சில வாரங்களில் விடுவிக்கப்படும்.

    சட்டத்தின் அடிப்படையில், நிதி விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், மாநில அரசு முதலில் ஊதியம் வழங்கும். பின்னர் மத்திய அரசு நிதியை விடுவிக்கும். தமிழ்நாடு ஏற்கனவே 7300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. பாரபட்சம் என்பதற்கு இடமில்லை" என்றார்.

    • தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
    • இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரியவந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஊரக வேலைத் திட்டத்தின்படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மை குற்றச்சாட்டு ஆகும்.

    தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின்படி பணி செய்து இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தெலுங்கானாவில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றியபோது மண் சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமுற்றார்.#RuralWorkPlan #MudAccident
    ஐதராபாத்:

    மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

    இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள நாராயண்பேட் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் மக்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



    இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இவ்விபத்து குறித்து  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘இந்த கொடூர சம்பவத்தை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது துரதிர்ஷ்டவசமானது. இதில் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும்’ என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #RuralWorkPlan #MudAccident

    ×